தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள தலைவன் வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 21). இவர், தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். நேற்றிரவு 7 மணிக்கு, வீட்டில் நடைபயிற்சி சென்றுவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். இரவு 9 மணிக்கு மேல் ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரை உறவினர்கள் தேடிப் பார்த்துள்ளனர்.
அப்போது அதே கிராமத்திலுள்ள ஒளி கோயில் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சத்தியமூர்த்தியின் உடல் மட்டும் கிடந்துள்ளது. அவரது தலையைக் காணவில்லை. இதையடுத்து ஆத்தூர் காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றியதுடன், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாகத் துண்டிக்கப்பட்ட தலையைத் தேடினர். ஆனால், காட்டுப்பகுதி மிகவும் இருட்டாக இருந்ததால், தலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
தலையைக் கண்டுபிடிக்காமல் உடலை எடுத்துச் செல்லக் கூடாது எனக் கிராம மக்கள் காவலர்களை முற்றுகையிட்டதுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் ஆகியோர் ஆய்வு செய்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், சத்தியமூர்த்தியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு, சத்தியமூர்த்தி கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் முட்புதருக்குள் வீசப்பட்டிருந்த தலை கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரணையில், "தலைவன் வடலி கிராமத்தினருக்கும், கீழ கீரனூர் கிராமத்தினருக்கும் பல வருடமாக ஊர்பகை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கீழ கீரனூர் கிராமத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்குள் சத்தியமூர்த்தியும் அவரது 2 நண்பர்களும் நுழைந்து, தென்னமரத்தில் ஏறி இளநீர்களைப் திருடியுள்ளனர்.
இதைப்பார்த்த காவல்காரர்கள் 3 பேரையும் மரத்தில் கட்டிவைத்து இளநீர் திருடியதற்கு மன்னிப்பு கேட்கச் சொன்னதாக தெரிகிறது. இதில் நண்பர்கள் 2 பேரும் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால், கடைசி வரையும் சத்தியமூர்த்தி, மன்னிப்பு கேட்க முடியாது எனக்கூறி, அந்த ஊர்க்காரங்களை சாதி பெயரைச் சொல்லி அவதூறு பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் அந்த ஊரிலுள்ள இளைஞர்களுக்கு தெரியவரவும், இருதரப்புக்கும் இடையே மோதல் வந்துள்ளது. இந்த நிலையில்தான் தலை துண்டித்து சத்யமூர்த்தி கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளார்" என்பது தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்தி மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 2 வழக்குகள் உள்ளன. மேலும் இக்கொலை குறித்து 2 பேரைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கொலைச் சம்பவத்தால் தலைவன் வடலி கிராமத்தைச் சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து நான்கு பேரை வெட்டிய ரவுடிகள்!