தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு விநியோகத்தை அதிமுக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜூ வழங்கினார்.
பேரூராட்சி பகுதிகளில் போட்டியிடுவோருக்கு 1,500 ரூபாயும் நகராட்சி பகுதிகளில் போட்டியிடுவோருக்கு 2,500 ரூபாயும் விருப்ப மனுவுக்கு பெறப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, "அதிமுக தலைமையில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. கட்சியை இபிஎஸ் ஓபிஎஸ் நல்ல முறையில் வழி நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் திரைப்படங்கள் எந்த ஒரு பிரச்சினைகள் இல்லாமல் சுதந்திரமாக வெளிவந்தன. திமுகவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு திரைப்படத்தினை விநியோகஸ்தர் உரிமம் வழங்கவில்லை என்றால் அந்த திரைப்படம் வெளியாவதில் மிகுந்த சிக்கல் உருவாகிறது. குறிப்பாக மாநாடு திரைப்படம் அம்மாதிரியான சூழலைச் சந்தித்து உள்ளது" என்றார்.
இதற்கு முன்னதாக கோவில்பட்டி 29ஆவது வார்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் சகாதேவன் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதையும் படிங்க: நெல்லை மாநகர பகுதிகளில் பெய்த அதிக கனமழை: இரண்டாவது நாளாக மழை நீர் வடியாததால் மக்கள் பெரும் அவதி!