மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் தொழிலாளர் நல சட்டங்களை நான்காம் தர சட்ட தொகுப்பாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு தழுவிய அளவில் நவம்பர் 26ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்களும், தொழிற்சங்க சம்மேளனங்களும் அழைப்பு விடுத்துள்ளன.
இது தொடர்பாக ஐஎன்டியூசி தொழிற்சங்க நிர்வாகி கதிர்வேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய அரசு தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்களை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. தொழிலாளர் நலனுக்காக இயற்றப்பட்ட சட்டங்களை நான்காம் தர தொகுப்பாக மாற்றியுள்ளது. நாடு முழுவதும் பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால், தொழிலாளர்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். பொதுத்துறை நிறுவனத்திற்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். விவசாய நலனுக்கு எதிரான சட்டங்களையும் மத்திய அரசு திணித்து வருகிறது. நாட்டின் பொருளாதார சக்கரங்களுக்கு முதுகெலும்பாக உள்ள துறைமுகங்களில் தனியார் முதலீட்டை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் இத்தகைய தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கங்கள் நவம்பர் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்த அறைகூவல் கொடுத்துள்ளது.
அதையேற்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக தொழிலாளர் சங்கம் மற்றும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்குபெறும்" என்றார்.
நவம்பர் 26ஆம் தேதி நடக்கின்ற பொது வேலை நிறுத்தத்தினால் சரக்குக் கப்பல்களில் இருந்து சரக்கு கையாளுகை முற்றிலும் பாதிக்கப்படும். இதனால், தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்திற்கு ஒரே நாளில் பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாளை அரசு விடுமுறை - அரசாணை வெளியீடு!