தூத்துக்குடியில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த ஆண்டு ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தொல்லியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் இரண்டு பகுதிகளிலும் 1000-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டும் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை என மூன்று இடங்களில் தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. சிவகளை அகழாய்வு பணியை பொறுத்தவரை முதல் கட்டமாக ரூபாய். 10 லட்சம் மதிப்பில் இந்த அகழாய்வு பணியானது தொடங்கியுள்ளது.
சிவகளை அகழாய்வுப் பணியானது, அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் நடைபெறுகிறது. மேலும் விக்டர் ஞானராஜ், பரத்குமார் என இரண்டு தொல்லியல் அலுவலர்கள், 6 ஆய்வு மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகளையில் சிவகளை பரம்பு, பேட்மாநகரம், ஸ்ரீ மூலக்கரை ஆகிய மூன்று இடங்களில் 18 குழிகள் அமைக்கப்பட்டு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் முதன் முறையாக கல்வட்டங்கள் இந்த சிவகளை அகழாய்வு பணியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஸ்ரீ மூலக்கரை பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளும் போது இந்த கல் வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 10க்கு 10 என்ற அளவில் ஒவ்வொரு கல் வட்டங்களும் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட கல் வட்டங்கள் உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். தற்போது ஒரு கல் வட்டங்கள் மட்டும் தோண்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. அதில் 7 முதுமக்கள் தாழிகள் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இந்த கல் வட்டங்களை பொறுத்தவரை சுமார் 3000 ஆண்டுகள் பழமையானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல் கல் வட்டங்கள் கொடுமணல் பகுதிகளில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிவகளை பகுதியில் நடைபெற்று வரும் இந்த அகழாய்வு பணியில் 29 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று முதுமக்கள் தாழிகள் மட்டும் முழுமையாக மூடியுடன் காணப்படுகிறது.
எனவே இந்த மூடியுடன் காணப்படும் தாழிகள் ஆய்வுக்கு உற்படுத்த உறுதுணையாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 3000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களைத் தடுக்க ரோந்து பணிகள் தீவிரம்!