தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமெடுத்த நிலையில், மாநில அரசு ஊரடங்கு உத்தரவை மீண்டும் கடுமையாக்கி உள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவித்தது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கையொட்டி, மாவட்ட காவல் துறையின் சார்பில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் காவல் துறையினர் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 60 இடங்களில் வாகன தணிக்கைகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர மொபைல் ரோந்து வாகனங்கள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஊரடங்கையொட்டி, தூத்துக்குடியில் அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி நகரில் எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் பழைய பேருந்து நிலைய சாலை, புதிய பேருந்து நிலைய சாலை, வி.இ.ரோடு, தமிழ் சாலை, உள்ளிட்டவைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. முக்கிய சந்திப்புகளில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அநாவசியமாக வாகனங்களில் வருவோருடைய வாகனங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், அபராதமும் வசூலிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கரோனாவினால் 2 ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 388 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 238 பேர் நோய் தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார்.
நோய் தொற்று அறிகுறி கண்டறியப்பட்ட 2 ஆயிரத்து 633 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.