தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்கான அகில இந்திய அளவில் கல்லூரிக்களுக்கிடையேயான கூடைப்பந்து போட்டி கடந்த 17ஆம் தேதி முதல் தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பிலுள்ள ராமகிருஷ்ணன் நினைவு மின்னொளி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் 9ஆவது அகில இந்திய அளவிலான இப்போட்டியில் சென்னை லயோலா, பெங்களூரு ஜெயின், கேரள மார் இவோனியாஸ் கல்லூரி உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று பெண்கள் பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் எம்.ஒ.பி. வைஷ்ணவ் கல்லூரி அணியும், செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் மோதின. முடிவில் 62 - 42 புள்ளிகள் பெற்று எம்.ஒ.பி.வைஷ்ணவ் அணி வெற்றிபெற்றது.
அடுத்து மார் இவியான்ஸ் அணியும் எத்திராஜ் அணியும் மோதியதில் 53 - 50 என்ற புள்ளிகள் கணக்கில் மார் இவியான்ஸ் அணி போராடி வெற்றிபெற்றது.
ஆண்கள் பிரிவிற்கான அரையிறுதிப் போட்டியில் லயோலா கல்லூரி அணியும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி அணியும் மோதின. இப்போட்டியில் 68-63 என்கிற புள்ளிக்கணக்கில் சென்னை லயோலா அணி வெற்றிபெற்றது.
அடுத்ததாக ஜெயின் யுனிவர்சிட்டி அணிக்கும் மார் இவான்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 57-35 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெயின் யுனிவர்சிட்டி அணி வெற்றிபெற்றது.
அரையிறுதியில் வெற்றிபெற்ற அணிகளுக்கான இறுதிப்போட்டி ஜிம்கானா கிளப்பிலுள்ள ராமகிருஷ்ணன் நினைவு மின்னொளி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
மேலும், பெண்கள் பிரிவுக்கும் இன்றே அரையிறுதி ஆட்டமும் இறுதி ஆட்டமும் நடபெறவுள்ளதாக தெரிகிறது. இதில் வெற்றிபெறும் அணிகளுக்கு சுழற்கோப்பை, சான்றிதழ், பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன.