தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 13ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ஆம் தேதியும், திருக்கல்யாணம் 19-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், கோட்டாட்சியர் குருசந்திரன் தலைமையில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உதவி கலெக்டர் குருச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாசில்தார் வாமணன், அறங்காவலர் செந்தில்முருகன், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், திருவிழாக் காலங்களில் பக்தர்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கி விரதமிருப்பதற்காக கோவில் வளாகத்தில் 21 தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கொட்டகைகளின் உள் பகுதியில் மழைநீர் பாதுகாப்பு கருதி, சுமார் ஒரு அடி உயரத்தில் பலகைகள் மூலம் சிறிய மேடை அமைக்கப்படும். மேலும் தற்காலிக கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.
13 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, மேலும் 80 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் நடமாடும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். பக்தர்கள் பாதுகாப்பு கருதி 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் மருத்துவக் குழுவும், கோயில் வளாகத்தில் 4 இடங்களில் அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.
தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். கடல் காவல் படை மற்றும் மீன்வளத்துறை மூலம் கடலில் பக்தர்கள் ஆழத்திற்குச் செல்லாமல் தடுத்திடும் வகையில், மிதக்கும் வகையில் தடுப்புக் கயிறுகள் போடப்பட்டு வீரர்கள் ரோந்து செல்வர். திருவிழாக் காலங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்கவும், பக்தர்கள் விரதமிருக்கும் கொட்டகைகளில் மின் கசிவு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பான முறையில் மின் தடங்கள் அமைக்கப்படும்.
சாலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும். தெருநாய்கள் பக்தர்களை தாக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். இந்த முறை கடற்கரையில் சூரசம்ஹாரம் பார்க்கும் இடங்களில் இரும்புக் குழாய்கள் மூலம் பாதைகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கப்படவுள்ளது.
பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் திருநங்கைகள் மற்றும் கட்டாய வசூல் செய்பவர்களை அப்புறப்படுத்த போலீசார் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெறும் இடங்களில் யாரும் நுழையாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன் , துணை காவல் கண்காணிப்பாளர் வசந்த்ராஜ், டாக்டர் பொன்ரவி, நகராட்சி ஆணையர் கண்மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஆகவே, அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் ஜி.லட்சுமிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வட மாநிலத் தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேசத்தினர் ஊடுருவலா? - சென்னையில் NIA அதிரடி ரெய்டு!