திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் முன்னிலையில் ஏராளமான மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். அப்பொழுது அவர் பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் ஆகியவற்றை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற உணர்வுடன் மாற்று கட்சியினர் சாரை சாரையாக அதிமுகவில் இணைகின்றனர்.
கரோனா நேரத்திலும் தகுந்த இடைவெளியை பின்பற்றி தமிழ்நாடு முழுவதும் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் மூலம் கண்டிப்பாக 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்.
சென்ற ஏழு ஆண்டுகளாக நிரம்பாத மேட்டூர் அணை இந்தாண்டு நிரம்பியதால் ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைவர்கள் உரிய நேரத்தில் அறிவிப்பார்கள்.
அந்தந்தப் பகுதிகளை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டாவது தலைநகரம் குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனை விவாதபொருளாக்க வேண்டாம். ரேஷன் கடைகளில் கூடுதலாக வழங்கப்படும் ஐந்து கிலோ அரிசியுடன் ஒரு கிலோ கோதுமையை பெற்றுக்கொள்ளலாம். கரோனா பரவலை தடுக்கும் விதமாக திருவாரூர் மாவட்டத்தில் நாள் தோறும் 70க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சி நூற்றாண்டு நீடிக்கும்' - அமைச்சர் ஜெயக்குமார்