உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். கரோனா தடுப்பு பணியை செய்து வரும் தூய்மை காவலர்கள், தங்கள் உயிரையும் துட்சமென கருதாமல் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் முகமூடி, கையுறை, மற்றும் காய்கறிகள் போன்றவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவாரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை அனைத்து துறைகளிலும் சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். திருவாரூர் நகராட்சி ஆணையர் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிகச் சிறப்பான முறையில் செய்து வருகிறார். அதே நேரத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான தெருக்களிலும் கிருமிநாசினி கொண்டு தினந்தோறும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுவரும் தூய்மை காவலர்களுக்கு நன்றி. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கரோனாவை தமிழ்நாட்டை விட்டே விரட்டியடிப்போம்" என்றார்.
இதையும் படிங்க: அச்சுறுத்தும் கோவிட்-19, நெருங்கும் குளிர்காலப் பருவம்: விதை நிறுவனங்களின் கோரிக்கை!