திருவாரூர்: நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட மூணாறு தலைப்பு பகுதியினை ஆட்சியர் சாந்தா நேரில் சென்று பார்வையிட்டு நீர் வரத்து மற்றும் நீர் பகிர்ந்தளிப்பு குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், வடகிழக்கு பருவமழையின்போது மாவட்டத்தில் பாதிக்கக்கூடிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கும் பகுதிகளிலிருந்து நீரினை வெளியேற்ற மோட்டார் பம்புகள், சாலைகளில் சாயும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவதற்கு தேவையான மரம் அறுக்கும் இயந்திரம், வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் தேவையான அளவு மணல் நிரம்பிய சாக்கு மூட்டைகள் போன்றவை தயார் நிலையில் உள்ளன.
மேலும், வடிகால் பகுதிகளில் அமைந்துள்ள சிறு பாலங்களில் அடைப்பு ஏதுமின்றி சுத்தம் செய்து தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக வடிகால்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் திருவாரூர் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, நீடாமங்கலம் ஒன்றியக் குழுத்தலைவர் செந்தமிழ் செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.