மேட்டூர் அணையின் அதிகப்படியான நீர் வரத்தினால் சம்பா சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஆற்றுப்படுகை வரை நீர் வந்தாலும், அதிலிருந்து பல கிராமங்களுக்குச் செல்லும் உள் வாய்க்கால்கள் தூர்வாரப் படாததால் நீர் அங்கு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் திருவாரூரிலுள்ள கூடூர், மாங்குடி, நாரணமங்கலம் உள்ளிட்ட 14 கிராமங்களுக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை இதனால் அப்பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய இயலாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து தண்ணீர் உள்வாய்க்கால்கள் வழியாக எங்கள் பகுதிக்குச் சுலபமாக வந்தடைய அதனை தூர்வாருமாறு பலமுறை பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கூறியும் அவர்கள் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் எங்களுக்கு காவிரியில் நீர் இருந்தும் கிடைக்கவில்லை.
எனவே, காவிரி நீரானது உள்வாய்க்கால்கள் வழியாக வந்துசேர அதனை தூர்வார அரசு முன்வரவேண்டும். மேலும் எங்களுக்கு அதிகப்படியான நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு திருவாரூர் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.