திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக ஆறுகளின் நடுவே 75 பாலங்கள் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. இதில் 15 பாலங்கள் பணி முழுமையாக நிறைவடைந்து மீதமுள்ள 60 பாலங்களின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த மாவட்டத்தில் முகந்தனூர் என்ற இடத்திலிருந்து பிரியும் ஓடம்போகி ஆற்றை நம்பி காட்டூர், தண்டலை, அம்மையப்பன், பழவனக்குடி, கேக்கரை, பள்ளிவாரமங்கலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் விவசாயத்திற்காக சுமார் 9 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. தற்போது தண்டலை மற்றும் மருதபட்டினம் ஆகிய இரண்டு இடங்களில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதும் விவசாயிகள் உழவு பணிகளை முடித்து காத்திருந்தனர். இந்நிலையில், பாலம் கட்டுமானப்பணிகள் நடப்பதால் விளைநிலங்களுக்கு தண்ணீர் வரவில்லை. தண்ணீர் காலம் கடந்து திறந்துவிடப்பட்டால் அறுவடை சமயத்தில் பயிர்களுக்கு மழை, வெள்ளம் போன்றவற்றால் பாதிப்பு உண்டாகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் காத்திருந்த நிலையில், தண்ணீர் திறந்தும் பயனில்லாமல் போனது. அரசு உடனடியாக கட்டுமானப் பணிகளை நிறுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஓடம்போகி ஆற்றை நம்பியிருக்கும் விவசாயிகள் பயிரிடமுடியும்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்கம்!