புதுச்சேரி: திருவாரூர் அருகே உள்ள தியானபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள் இல்லத் திருமண விழாவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதுச்சேரி மாநிலத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் உள்ளது. கட்சித் தலைவர்கள் சேர்ந்து பேசிய பின்னர் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
பாஜக அரசு இருமொழிக் கொள்கையைத் திணித்துவருகிறது. ஆனால், புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். நீட் தேர்வு, எரிவாயுத் திட்டம் போன்ற மக்கள் விரோதச் சட்டங்களை பாஜக அரசு செய்துவருகிறது.
அதுமட்டுமின்றி, புதுச்சேரியில் மின்வாரியத் துறை, பாரத் பெட்ரோலியம், காப்பீடு, விமான துறை, நிலக்கரிச் சுரங்கம், வங்கிகள் என அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்கிவருகிறது. இவ்வாறு அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்கிவிட்டால் அரசை எப்படி நடத்த முடியும்? பொதுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் உயரும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, இந்தியாவை அதானிக்கும் அம்பானிக்கும் தாரைவார்த்து அடைமானம் வைத்துவிடும்.
பாஜக புதுச்சேரியில் காலூன்ற முடியாது. மதவாத, பிரிவினைவாத சக்திகள் நாட்டில் தலையிடக் கூடாது. மதசார்பற்ற அணிகள்தான் இந்த நாட்டிற்குப் பொருந்தும்.
அரசு அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செயல்பட வேண்டும். ஆனால் மத்தியில் சர்வாதிகார ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது" எனக் கூறினார்.