தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்படும் திருவாரூர் மாவட்ட ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், "தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் பொது விநியோகத் திட்டத்தின் பணிகளுக்கும் மக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதையடுத்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதில் மாற்றுப் பணியாளர்கள் மூலம் கடைகள் செயல்பட உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அதையும் மீறி ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் மேற்கொள்ளவிருக்கும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு No Work No Pay என்கின்ற அடிப்படையில் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்" எனக் கூறப்பட்டிருந்தது.