திருவாரூர்: மாவூர், வேப்பத்தாங்குடி, வஞ்சியூர், பின்னவாசல் உள்ளிட்ட கிராமங்களில் மழையால் சேதமடைந்துள்ள குறுவைப் பயிர்களை தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆர்.பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்மேற்குப் பருவமழை பருவம் மாறி பெய்ததால் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் பேரழிவை சந்தித்திருக்கின்றன.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவைப் பயிர்கள் மழையால் அழிந்துள்ளன. பெரும் மழை பாதிப்பால் சேதமடைந்த குறுவைப் பயிர்களைக் கணக்கிட்டு அரசு இழப்பீடு வழங்கிட வேண்டும்.
சிறு மழை பெய்தால் கூட மின் கம்பங்கள் உடைந்து உயிரிழப்புகள் தொடர்கின்றன. எனவே, உயர்மட்டக் குழுவை அமைத்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். இலவச மின் இணைப்பிற்காக சுமார் 1,700 விவசாயிகள் 2018ஆம் ஆண்டு முதல் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: என்எஸ்ஜி வீரர்கள் இன்று சென்னை வருகை!