துபாயில் தடைசெய்யப்பட்ட அன்சருல்லா இயக்கத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதில் சிலரது வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் இரு நாட்களுக்கு முன்பு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அகமது அசாருதீன் வீட்டின் பூட்டை உடைத்து என்ஐஏ அலுவலர்கள் சோதனையிட்டனர். அங்கு செல்போன், சிம்கார்டு, சிடி (CD), வங்கி கணக்குப் புத்தகம் உள்ளிட்டவற்றை அலுவலர்கள் கைப்பற்றிச் சென்றனர்.
இந்நிலையில், முகம்மது மகன் தாஜிதீன் (39), சோதனையில் ஈடுபட்ட என்ஐஏ-வை விமர்சனம் செய்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், என்ஐஏ என்ற பெயரில் பாசிச காவி இந்துத்துவ மத்திய அரசு முத்துப்பேட்டை இஸ்லாமியர்களை வேட்டையாடிவருவதாக குற்றம்சாட்டினார். முத்துப்பேட்டை ஜமாத்துகளுக்கு ஆதரவாக யாரும் இல்லை என வேதனை தெரிவித்த அவர், முத்துப்பேட்டையை மட்டும் ஏன் குறி வைத்து வருகிறார்கள்? எனக் கேள்வியெழுப்பினார்.
எச்சரிக்கை! முஸ்லிம்கள் எம்பிடி புரட்சி இயக்கம் எனவும் உஷார்படுத்தி குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமார் காவல் துறையினரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, தாஜிதீனை கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.