திருவாரூர் அருகே உள்ள மூங்கில்குடியில் நடைபெற்றுவரும் பாலம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தேவையான இடங்களில் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணிகள் விரைவாக நடைபெற்றுவருகின்றன.
இந்தக் கட்டுமான பணிகள் அனைத்தும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு முன் முடிக்கப்பட்டுவிடும்.
தலைமைச் செயலரை சந்தித்து திமுக சார்பில் கொடுக்கப்பட்ட 98 ஆயிரத்து 752 மனுக்களில் ஒன்றில்கூட சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அவை அனைத்தும் உணவுத் தேவையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தன. அரசின் சார்பில் மக்களின் உணவுத் தேவை அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவருகின்றன.
திருடனுக்குத் தேள்கொட்டியது போல திமுகவினர் அங்குமிங்கும் ஓடிச் சென்று மனுக்களை கொடுத்துவருகின்றனர். அதில் ஒரு லட்சம் மனுக்கள் அரசிடம் கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் திமுகவினர் மூலம் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. திமுகவினர் பதற்றத்தில் தொடர்ச்சியாகப் பொய் கூறிவருகின்றனர்.
ஒரே பொய்யை திரும்பத் திரும்ப எத்தனை முறை கூறினாலும் அது உண்மையாகிவிடாது என்பதனை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ’உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை’ - அமைச்சர் காமராஜ்