திருவாரூர் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் 122 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதில் மணமக்களுக்கு கட்டில், பீரோ உள்பட 72 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, "அதிமுக திட்டங்களை குறைகூறி வரும் வைகோ எப்பொழுதும் பார்வைக் கோளாரு உள்ளவர். எதையும் நல்லெண்ணத்துடன் பார்க்க வேண்டும். அது தீயதாக இருந்தால் அவர் பார்ப்பதும் தீயதாகத்தான் தெரியும். அந்த வகையில் ஸ்டாலினோடு அவர், சேர்ந்திருப்பதால் அதிமுகவையும் பார்வைக் கோளாருடன் பார்க்கிறார்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை சிலர் சட்டரீதியாக ஆதரித்துவிட்டு, அரசியல் ரீதியாக எதிர்க்கின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திமுக குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கு வங்கிக்காக எதிர்த்து வருகிறது" என்றார்.