திருவாரூர்: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் நிலையில் டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டம் முழுவதும் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
இதில் குறிப்பாக நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகள், முழுவதும் தொடர்ந்து 5 நாட்களாகப் பெய்து வந்த கனமழையின் காரணமாக, நன்னிலம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தின் வழியாகச் செல்லக்கூடிய வாஞ்சியாற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கதிராமங்கலம், கோவில்பத்து, குருங்குளம், பண்டாரவாடை, உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 700-ற்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் முழுவதுமாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
கடலாக மாறிய நிலங்கள்
இதனைத் தொடர்ந்து சாகுபடி நிலங்கள் முழுவதும் கடல் போல் காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் வாஞ்சியாற்றைப் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்ததுதான், கரை உடைப்பிற்குக் காரணம் எனவும், ஆண்டுதோறும் விவசாய நிலங்கள் முழுவதும் வீணாகி வருவது வாடிக்கையாகிவிட்டது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு மழைக்காலம் முடிந்த பின் வாஞ்சியாற்றை முழுமையாகத் தூர்வாரி கொடுக்க வேண்டும். அதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து கூடுதல் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 6 காவலர்கள் - அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு