திருவாரூர்: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணையவழியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அச்சங்கத்தின் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையேற்றார்.
கூட்டம் முடிந்தபின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையைக் கட்டும் கர்நாடக முதலமைச்சரின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்து விவாதிக்க தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள், விவசாயிகள் கொண்ட கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டவேண்டும்.
மேகேதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தாமல் மவுனம் காக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கண்டித்து நாளை (ஜுன் 21) விவசாயிகள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். அரசியல் கட்சிகள், விவசாயிகள் அனைவரும் ஒட்டுமொத்த எதிர்ப்பைக் காட்டும் வகையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவேண்டும் என வேண்டுகிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அடிப்படையில் நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2,500 வழங்கி கொள்முதலை தடையின்றி நடைபெற போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியதன் அடிப்படையில் மூன்று வேளாண் விரோதச் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
பெரும் தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை வரம்புமீறி பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம் - பி.ஆர். பாண்டியன் கண்டனம்