திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால், மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு போக சாகுபடியான, சம்பா சாகுபடியை மட்டும் செய்து வந்தனர். மேலும் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் கடந்த 250 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நீர்மட்டம் 100 அடி இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்தார். இதற்கு திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தனர்.
தற்போது விவசாயப் பணிகளில் வயல்களை சமப்படுத்தும் பணிகளில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதுபோல் தற்போது நிலவிய இந்த கரோனா பாதிப்பினால், அடுத்த கட்ட பணிகளைத் தொடங்குவதற்கு விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக வேலை இல்லாமல், பெரும் பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தம்!