திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கோடை காலப் பயிராகப் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, நன்னிலம் அருகே உள்ள பழையாறு, கமுகக்குடி, காளியாகுடி, சோழன்குறிச்சி, மாத்தூர், திருக்கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில், பருத்தி சாகுபடியில் பூச்சி நோய் தாக்குதல் மற்றும் பூஞ்சை நோய் தாக்குதல் அதிகம் தென்படுவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பேசிய விவசாயிகள், "சம்பா தாளடிக்குப் பிறகு தற்போது கோடை சாகுபடியான பருத்தி சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். அடி உரமாக யூரியா, பொட்டாசியம் வைத்துள்ளதால் ஒரளவுக்கு பருத்தி வளர்ந்து வரும் நிலையில் இருக்கும் போது, பூஞ்சை நோய் தாக்குதல் அதிகம் ஏற்பட்டு பருத்தி முழுவதும் கருமை மற்றும் மஞ்சள் நிறமாகக் காட்சியளித்து செடி முழுவதும் கருகி வருகிறது.
பருத்தி சாகுபடிக்கான உரங்களுக்குத் தமிழ்நாடு அரசு மானியம் வழங்கி வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மானிய தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. பருத்தி கிலோ ஒன்றுக்கு 25 முதல் 30 ரூபாய் விலை போனதை போல், இந்தாண்டும் இதே நிலை நீடித்தால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்கும் சூழல் உருவாகும்.
இதனை ஈடு செய்ய வேண்டுமென்றால், பருத்தி சாகுபடி உரத்திற்கான மானியத்தை உடனடியாக வழங்கினால் மட்டுமே அதை ஈடு செய்ய முடியும். தற்போது வேளாண் இடுபொருட்களின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதால், குறிப்பிட்ட நேரத்தில் பருத்திக்கு இடுபொருட்கள் வைக்க முடியாமல் தவித்து வருகிறோம்.
இது தொடர்பாக வேளாண் துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும், இதுவரை பயிர்களை வந்து பார்வையிடமால் இருக்கின்றனர். இந்த பூஞ்சை நோய் தாக்குதலில் இருந்து பருத்தியை எப்படி பாதுகாக்கப் போகிறோம் என குழப்பத்தில் தவித்து வருகிறோம்.
ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவு செய்தும், அதற்கான மகசூல் கிடைக்குமா என்று அச்சத்தில் உள்ளோம். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, வேளாண் துறை அலுவலர்கள் உடனடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அதற்கான மருந்துகளைப் பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்" என்கின்றனர்.