திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் சம்பா, தாளடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நன்னிலம் அருகே சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பனங்குடி வலப்பாறு தடுப்பணையின், சுவர்கள் முழுவதும் காரைகள் பெயர்ந்து இடிந்து விழுந்துள்ளன. இந்த தடுப்பணை பாசனம் மற்றும் வடிகாலாக செயல்பட்டு வருவதால், இவற்றை நம்பி பனங்குடி, சன்னாநல்லூர், அச்சுதம்பேட்டை, திருக்கண்டீஸ்வரம், மாதாகோவில், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா தாளடி பணிகள் நடைபெற்று பயிர்கள் வளர தொடங்கியுள்ளன.
"நன்னிலம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தடுப்பணை இல்லாமல் பழுதுதடைந்து காணப்படுகிறது. பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் முறையிட்டால் போதுமான அளவு நிதி இல்லை என கூறுகின்றனர். ஆண்டுதோறும் தடுப்பணைகளை சரி செய்கிறோம் என்ற பெயரில் வர்ணம் மட்டும் பூசிவிட்டு சரி செய்வதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.
பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் மழை நீரும் அதிகளவில் காவிரி நீருடன் சேர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனடியாக தடுப்பணையை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் சேதுராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 'எதிர்மறை சிந்தனைகளை அகற்றி, புதிய சாதனைகள் புரிவோம்' - டிடிவி தினகரன் வாழ்த்து