திருவாரூர் மாவட்டம் முழுவதும் "விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்" என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருவாரூர், பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களிடம் பேசினார்.
சசிகலா போட்ட பிச்சை:
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அவர் ஒரு அணைகின்ற விளக்கு. முதலமைச்சர் பதவி சசிகலா போட்ட பிச்சை. அந்த பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறி வருகிறார்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி இருப்பாரா என்பதைப் பார்ப்போம். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஹெக்டேர் ஒன்றுக்கு 20ஆயிரம் வழங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கூறிவருகிறார்.
கூட்டுக் களவாணி சசிகலா:
சசிகலாவும் ஜெயலலிதாவும் கூட்டு களவாணிகள். குற்றம் செய்ததற்காக சிறைக்குச் சென்றவர், சசிகலா. அவர் நாட்டுக்காகவோ நாட்டின் சுதந்திரத்திற்காகவோ போராடி சிறைக்குச் செல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்று, பிரதமரை சந்தித்து விட்டு வந்த பின்னர் தனிமைச்சிறையில் இருந்த சசிகலாவிற்கு கரோனா எப்படி வந்தது என அவரது சகோதரர் திவாகரன், குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
பாஜகவைப் பொறுத்தவரை ஏ,பி,சி என பல்வேறு குழுக்கள் உள்ளன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவை தமிழ்நாடு மக்கள் நிராகரித்து விட்டனர். பாஜக தங்களை பெரிய சக்தியாக ஊடகங்களை மிரட்டி தங்களை ஊதி பெரிதாக்கி கொண்டுவருகிறார்கள்.
7 பேர் விடுதலையில் தேவையற்ற தாமதம் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டும், ஏதோ ஒரு காரணத்திற்காக ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி என்பதால், எந்த முடிவு எடுத்தாலும் அது மத்திய அரசின் முடிவாகத் தான் இருக்கிறது. பாஜக அரசு 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என்ற முடிவில்தான் இருக்கிறது.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், யார் வந்தாலும் திமுக அணி வெற்றியை எவராலும் தடுக்க முடியாது" என்றார். இதற்கு முன்னதாக அவர் திருவாரூர் அடுத்துள்ள காட்டூரில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் , மாவட்ட ஊராட்சிச் செயலாளர் பாலு, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டப் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: தயாநிதி மாறன்