திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஆதனூர் கிராமத்தில் குறுவை சாகுபடிப் பணிகளை ஆய்வு செய்த மாநில உணவுத்துறை அமைச்சர் காமராஜ், இயந்திர நடவு பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உடனிருந்தார். அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு சூரிய ஒளி விளக்கு மற்றும் இடுபொருள்களை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டதால், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலத்தைக் காட்டிலும் தமிழ்நாட்டில் குறைந்துள்ளது. மக்களுடைய தேவைகள், பணிகள் எக்காரணத்தை கொண்டும் தாமதமாக கூடாது என்பதற்காக அனைத்து பணிகளும் தொடர்ந்து மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், விவசாயப் பணிகளை தொடங்குகின்ற வகையில், குறுவை சாகுபடிக்கான இயந்திர நடவுப் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டது. நெல் விளைச்சலில் மிகப்பெரிய வரலாற்று சாதனை நடந்துள்ளது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு 20 விழுக்காடு கூடுதல் விளைச்சல் கிடைத்துள்ளது. அதேபோல வருகிற பருவமும் சிறப்பாக இருக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் இந்த ஆண்டு 25 லட்சம் மெட்ரிக் டன்கள் எட்டியுள்ளன. இது வரலாற்று சாதனையாகும்.
ஜூன்12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு இன்றைக்கு குறுவை சாகுபடிப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்குத் தேவையான விதை, உரம், பூச்சி மருந்துகள் இருப்பில் உள்ளன. இதனை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஆணை அரசிதழில் வெளியீடு