திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், "திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் இருக்கிறது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்ட பின்னர் முதலமைச்சர் முடிவெடுப்பார்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய கடைமடைப் பகுதிகளுக்கு நீர் முழுவதும் பாய்ந்துவிட்டது. பாசன வாய்க்கால்களுக்கு எப்போது தண்ணீர் தேவையோ அப்போது நீர் திறந்து விடப்படும்.
கரோனா பாதிப்பின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதற்காக அவசியம் எங்களுடைய அரசுக்குக் கிடையாது. இது மக்களைப் பீதியடைய செய்யக் கூடிய செயல்” என்றார்.