நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பர்ப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமமுக சார்பில் தேர்தலில் களம் காணவிருக்கும் திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்பாளர் எஸ். காமராஜ், நாகை நாடாளுமன்ற வேட்பாளர் செங்கொடி ஆகியோர் திருவாரூர் அருகே விளம்பல் பகுதியில் பரப்புரையை இன்று தொடங்கினர்.
முன்னதாக சட்டமன்ற வேட்பாளர் காமராஜுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்த போது ஆரத்தித் தட்டில் பெண்களுக்கு பணம் வழங்கினார். மேலும் இந்த வாக்கு சேகரிப்பில் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் பேரணியாக வலம் வந்ததால் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் அரசு மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தையை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் சிறிது நேரம் மாட்டிக்கொண்டு தவித்தது. பின்னர், காவல்துறையினர் ஆம்புலன்ஸ் செல்ல ஏதுவாக போக்குவரத்தை சரி செய்தனர்.