திருவண்ணாமலை தாலுகா, கீழ்செட்டிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா (34) கடந்த டிசம்பர் 20ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த கும்பல், ராஜா வீட்டின் கதவை உடைத்து, அவரை தாக்கி வீட்டில் இருந்த ரூபாய் 10 ஆயிரம் மற்றும் 1 லட்சத்து 30 ஆயிரத்து ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து ராஜா தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை மேற்கொண்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா, ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியகுமார் என்பவரின் மகன் பாஸ்கர் (26), கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, பெருவல்லூர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் கிரி (31), கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா, நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் மாரி (27) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, மூவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட பாஸ்கர், கிரி, மாரி ஆகிய மூன்று நபர்களையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்களை காவலர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.