திருவண்ணாமலை மத்தியப் பேருந்து நிலையத்தில் உலகையே அச்சுறுத்தி வரும் 'கொரோனா வைரஸ்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்துப் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதையடுத்து, அவர் கை கழுவும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக பொதுமக்கள் அனைவரும் தங்கள் கைகளை 15 முதல் 20முறை சோப்பைக் கொண்டு ஒருநாளைக்கு 30 வினாடிகள் கழுவவேண்டும். இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அங்கு இருந்த பயணிகளிடையே தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களைப் பயணிகளிடம் கொடுத்து படித்து விழிப்புணர்வு அடைய கேட்டுக்கொண்டார். மேலும் பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
தும்மல், இருமல் வந்தால் கைகுட்டைப் பயன்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமது நாட்டில் இந்த வைரஸ் நோய்த் தாக்கத்தை வரவிடாமல் தடுப்போம் என்று உறுதி ஏற்போம் எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, பேருந்துகளுக்கு லைசால் என்ற கிருமிநாசினியைக் கொண்டு பேருந்திலிருந்து கிருமிகளை அழிப்பதற்குச் சுகாதாரப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில், திருவண்ணாமலை நகராட்சி ஆணையர், சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மணற்சிற்பம் மூலம் கொரோனா விழிப்புணர்வு