திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியில் ஸ்டார் பவுண்டேஷன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஜெயராமன் மற்றும் இளவரசி ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் ஏழை எளிய மக்களுக்கு சேலை, தங்க மூக்குத்தி, ஆடுகள் வழங்குவதாகவும், கணினி பயிற்சி, அழகு கலை பயிற்சி, தையல் பயிற்சி ஆகியவற்றை வழங்க உள்ளதாகவும், குறிப்பாக கடன் உதவி செய்து தருவதாகவும், பொதுமக்களிடம் கூறி உள்ளனர். இதற்காக ஏஜெண்டுகளையும் நியமித்துள்ளனர்.
"4 ஆடுகள் வேண்டுமா? மாதம் 1,600 ரூபாய் கட்டுங்க", "தினசரி 50 ரூபாய் கட்டினால் சேலை, மூக்குத்தி", மாதம் 10 ஆயிரம் கட்டினால் ஒரு லட்ச ரூபாய் வட்டியில்லா கடன் என இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறி உள்ளனர்.
இதை நம்பிய ஏஜெண்டுகள் மக்களிடம் பணம் வசூலித்து மாதம் தவறாமல் கட்டி வந்த நிலையில்தான், நிறுவனத்தை சேர்ந்தவர்கள் திடீரென கம்பி நீட்டி உள்ளனர். அண்மையில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் மூடப்பட்டதால் பொதுமக்களும் ஏஜெண்டுகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
பணத்தை இழந்த பொதுமக்கள் ஏஜெண்டுகளிடம் பணத்தை திருப்பிக் கேட்டதை அடுத்து, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏஜெண்டுகள் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(27.09.22) புகார் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இது போல் 10 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தான் மட்டும் 40 லட்சம் ரூபாய் வரை கட்டி உள்ளதாக வேதனை தெரிவிக்கிறார், புகார்தாரர்களில் ஒருவரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவருமான அன்புமொழி.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த நிறுவனத்திற்காக வசூலித்த பணத்தை திருப்பி அளிக்க கோரி ஏஜெண்டுகளான தங்களை, கட்டாயப்படுத்துவதாகவும், நீதிமன்றத்தின் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், கண்ணீர் வடிக்கும் ஏஜெண்டுகள் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஷார்ட்ஸ் வீடியோவால் விபரீதம் ... காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்...