திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 4 ஆயிரம் சதுர அடியில் 105 அரங்குகளுடன் அமைக்கப்பட்ட புத்தகத் திருவிழாவை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஏப்ரல் 9) தொடங்கி வைத்தார். இதில், சூரியன் பதிப்பகம், நர்மதா பதிப்பகம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்களைச் சேர்ந்தவர்களின் அரங்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த புத்தகத் திருவிழாவில் சிறு குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அனைத்து விதமான பல்வேறு புத்தகங்களும், அரசு தேர்வுகள், வங்கி தேர்வுகள், நீட் தேர்வுகள் உள்ளிட்ட தேர்வுகளுக்கு தேவையான முக்கியமான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக, சிறுவர்களுக்கான நீதி கதைகள், பொது அறிவு, கலை, அறிவியல், இலக்கியம், சங்க கால இலக்கியங்கள், சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகங்கள் சார்ந்த, சுமார் ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் புத்தகத் திருவிழாவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த பொதுப்பணி துறை அமைச்சர் விழா அரங்கில் தமிழ் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய மாணவிகளின் கலை நிகழ்ச்சியை கண்டுகளித்து, முதல்வரின் நூலகத் திட்டத்தின் கீழ் பல்வேறு வாசகர்களுக்கு அடையாள அட்டையையும், புத்தகங்களையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, இந்த விழாவில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒரு மனிதன் கற்பதன் மூலமாகத்தான் அனைத்தையும் பெற முடியும் என 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை எடுத்துக்காட்டாக கூறி, நமது வீடு முதல் இந்திய நாடு வரை பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும் என்றால் கல்வி அவசியம் என்று பேசினார்.
குறிப்பாக, 1949 ஆம் ஆண்டு முதன் முறையாக ஜெர்மனியில் புத்தகத் திருவிழா நடைபெற்றது என்றும், அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக 1972 ஆம் ஆண்டு டெல்லியிலும், மூன்றாவதாக கல்கத்தாவிலும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது என்றும், தொடர்ந்து சென்னையில் 1974 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது என்று பேசினார்.
பின்னர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களின் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ்நாட்டின் அடையாளமாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளதை சுட்டிக்காட்டி, தமிழ் நாட்டில் மாவட்ட மத்திய நூலகங்கள் 32, கிளை நூலகங்கள் 1926, நடமாடும் நூலகங்கள் 14, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 1915 நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் 745 என மொத்தம் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில், 4634 நூலகங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு இயங்கி வருவதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு தலைவர்களிலேயே தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்தோ, பொன்னாடையோ, மலர் மாலையோ கொடுக்க வேண்டாம், அதற்கு பதிலாக புத்தகத்தை தாருங்கள் என புத்தகப் பழக்கத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று பெருமிதமாக பேசினார்.
மேலும், குற்றவாளிகள் சிறையில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கும் வகையில் அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகம் அமைக்க ஏற்பாடு செய்தவரும் தமிழ்நாடு முதலமைச்சர் தான் என்றும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் குடும்பத்தினருடன் புத்தகத் திருவிழாவிற்கு வந்து புத்தகங்களை பெற்று தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் புத்தக திருவிழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பேசினார்.
இதனை தொடர்ந்து, இந்த புத்தகத் திருவிழா அரங்கங்களை பார்வையிட வந்திருந்த பள்ளி மாணவ மாணவிகள், பொதுப்பணித்துறை அமைச்சருடன் கைகுலுக்கி புத்தகத்தை பரிசாக அளித்து, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: ஈஸ்டர் பண்டிகை - தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் தத்துரூப நிகழ்ச்சி!