திருவண்ணாமலை: கலசபாக்கம் வட்டம், சொரகொளத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பொற்குணம், மருத்துவாம்பாடி, கமலபுத்தூர், கருத்துவம்பாடி, கரிங்கல்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக திருவண்ணாமலையைச் சேர்ந்த கணேஷ்பாபு என்பவர் கடந்த பத்தாண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உடற்கல்வி ஆசிரியரை பள்ளிக்கல்வித்துறையினர் வேறு பள்ளிக்குப்பணி மாற்றம் செய்தது. உடற்கல்வி ஆசிரியரை பணி மாற்றம் செய்ததைக்கண்டித்து அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வகுப்புகளைப்புறக்கணித்து பள்ளி முன்பாக தரையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வரும் கணேஷ்பாபு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சம்பந்தமான பயிற்சிகள் அளித்து அவர்களை மாவட்ட அளவில், மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து பரிசு பெற செய்துள்ளார். சொரகொளத்தூர் என்ற கிராமமே விளையாட்டால் அவரால் மேம்பட்டது.
உடற்கல்வி ஆசிரியரின் பணி மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் இதே பள்ளியில் அவரை பணியமர்த்த வேண்டுமான பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் தொடர்ந்த இந்த போராட்டத்தையடுத்து பெற்றோர்கள், மற்றும் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று மீண்டும் அதே பள்ளியில் கணேஷ் பாபுவை பணியாற்ற மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அடுத்து கணேஷ்பாபு மீண்டும் அதே பள்ளியில் இன்று (ஜூலை 29) வருகைப்பதிவேட்டில் கையொப்பமிட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார். இதனையடுத்து பள்ளி வழக்கம்போல் இயங்கியது.
இதையும் படிங்க: பரங்கிமலை ராணுவப்பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சி!