தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாளை( மே 24) முதல், மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கில் மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள், பால் விநியோகம், குடிநீர், தினசரி பத்திரிக்கை விநியோகம் ஆகிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.
மேலும், பொது மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், ஆகியவை தோட்டக்கலைத் துறை மூலம் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கினை நடைமுறைப்படுத்துவது குறித்தான ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே.23) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், ”நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை மட்டும் காய்கறிகள், பழங்கள் வழங்க சம்மந்தப்பட்ட வியாபாரிகள், வாகனங்களுக்கு அனுமதி அட்டை வழங்க வேண்டும். அனுமதி தொடர்பான விவரங்களை காவல் துறையினரிடம் தெரிவிக்க வேண்டும். அனுமதி அட்டையில் வாகன எண், நேரம், தெரு உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.
பொது மக்கள் அவர்கள் வசிக்கும் தெரு அல்லது கிராமத்தை விட்டு வெளியில் வராமல், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் , பழங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் செயல்படும் மொத்த விற்பனை சந்தையில், சில்லறை விற்பனையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பொது மக்களுக்கு அனுமதி கிடையாது நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி, தோட்டக்கலை, வேளாண் விற்பனை ஆகிய துறைகள் இணைந்து நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பொது மக்களுக்கு தடையின்றி காய்கறிகள் , பழங்கள் கிடைப்பதை அனைத்து துறைகளும் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கும் லாவா... 20 லட்சம் பேர் வெளியேற்றம்!