சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் 'மாவீரர் நாள்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பங்கேற்று, தமிழீழ போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
இதையடுத்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மோடி ஒரு கொள்ளைக்காரர் நாட்டில் அனைத்து மாநிலங்களையும் பிடித்து விட்டு இப்போது தமிழகத்தை பிடிக்க நினைக்கிறார்கள். அதனால்தான் திமுகவோடு பயணிக்கிறோம், திமுக ஒரு திராவிட இயக்கம் அதனை அழிக்க விடக்கூடாது.
அதானியை உருவாக்கியவர் நரேந்திர மோடி. அதானிக்கு 6000 கோடி கடன் வாங்கி கொடுத்த மோடிதான் முதல் குற்றவாளி அவரை கேள்வி கேட்காமல் தமிழகத்தின் முதல்வரை நோக்கி ஏன் கேள்வி கேட்கின்றனர். தூத்துக்குடியில் தொழிற்சாலையை சார்ந்தவர்கள் என்னை வளர்க்க பல முயற்சி செய்தார்கள் அப்போது தேர்தலை சந்திக்க என்னிடம் பணம் இல்லை. பணம் வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவர்களிடம் இருந்து பெற்று இருக்கலாம். அது என்ன பிழைப்பு. நாயினும் கீழான பிழைப்பு.
புலிகள் நிலைப்பாடு காரணமாகவே உங்களுடைய பலத்தை இழந்தீர்கள் என கூறுவார்கள். அது ஏன் ஜீவ லட்சியம், ஈழ தமிழர்களுக்கு ஒரு சிறு துரும்பை நகர்த்த முடிந்தாலும் அதனை எப்போதும் நான் செய்வேன்.
ஈழத்திற்கு சென்று பிரபாகரனை சந்திக்க இரண்டு முறை கோரிய பின்னர்தான் பிரபாகரன் நான் ஈழத்திற்கு வர சம்மதம் தெரிவித்தார். யாருக்கும் தெரியாமல் ஈழத்திற்கு புறப்படும் முன் கருணாநிதிக்கு 6 பக்கம் கடிதம் எழுதி விட்டு சென்றேன்.
இதையும் படிங்க: சந்தேகத்தில் காரை துரத்திய போலீஸ்; அவசரத்தில் காரை தலைகுப்புற கவிழ்த்த கடத்தல்காரர்கள்!
ஈழத்தில் இருந்த நேரத்தில் வைகோ ஈழத்திற்கு சென்றதற்கும், திமுகவிற்கு எந்த சம்மதமும் இல்லை என அறிக்கை வெளியிட்டனர். இதனை தெரிந்துகொண்ட பிரபாகரன் என்னை உடனடியாக நீங்கள் தமிழ்நாடு செல்ல வேண்டும் என தெரிவித்தார். ஆனால் நான் செல்ல மாட்டேன் என தெரிவித்தேன். இருப்பினும் அவர் வலியுறுத்தி கூறியதால் நான் செல்கிறேன் என கூறினேன் அடுத்த நாள் காலை புறப்படும் எனக்கு புட்டு, மீன், இறால் என விருந்து வைத்தார். அதேபோல புறப்படும் முன் நான் மாட்டிக்கொண்டால் என்னை சித்திரவதை செய்வார்கள் எனவே எனக்கும் ஒரு CYNIDE குப்பி வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் கழுத்தில் இருந்த ஒரு குப்பியை எனக்கு வழங்கினார்.
எந்த இயக்கத்திற்கா உழைத்தேனோ, எந்த இயக்கத்தை நேசித்தேனோ, அந்த இயக்கமே என்னை வெளியேற்றியது. 30 ஆண்டு காலம் திமுகவில் பயணித்தபோது 27 முறை சிறைக்கு சென்றேன். 1964ல் அண்ணாவின் முன்னிலையில்தான் அங்கீகாரம் பெற்றேன். மதிமுகவில் 30 ஆண்டுகளாக அரசியல் பணி செய்து வருகிறேன். எனது வாழ்நாளில் 60 ஆண்டுகள் பொதுவாழ்விலேயே கடந்துவிட்டது.
கட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு 5 இளைஞர்களை இணைக்க முயற்சி செய்யுங்கள். கொடி இல்லாத கொடிமரங்களில் கொடிகளை ஏற்றுங்கள். அமைப்பை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்துங்கள். அப்போது தான் நமக்கான நாள் வரும்” என தொண்டர்களுக்கு வைகோ அறிவுரை வழங்கினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்