சென்னை: நடிகர் விஜய், சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி முழுநேர அரசியலில் இறங்கியுள்ளார். அதன் அடிப்படையில், அவர் தனது கட்சி பெயர், கொடி அறிமுகம் உள்ளிட்டவற்றை நடத்தி முடித்தபிறகு, தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தி முடித்தார்.
இந்த மாநாட்டில் அவர் தவெக-வின் கொள்கை, அரசியல் மற்றும் சித்தாந்த எதிரிகள் உள்ளிட்டவற்றை அறிவித்தார். இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தவெகவின் தொண்டர்களும், விஜய்யின் ரசிகர்களும் வருகை தந்திருந்தனர்.
அதே சமயம், மாநாட்டிற்கு வருகை தந்த போதும், மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அவரவர் வீடு திரும்பிய போதும் எதிர்பார விபத்துகளில் சிக்கி திருச்சியைச் சேர்ந்த விஜய் கலை, சீனிவாசன் மற்றும் சென்னையைச் சேர்ந்த வசந்தகுமார், ரியாஸ், சார்லஸ் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த உதயகுமார் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு தவெக கட்சியின் தலைவர் விஜயும் அறிக்கையின் வாயிலாக இரங்கல் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: எவ்வளவு பெருமழை, வெள்ளத்தையும் சமாளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது; அமைச்சர் சேகர் பாபு
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (நவ.28) சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை நேரில் வரவழைத்து நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலையை பொருத்து நிதி உதவியானது வழங்கப்பட்டுள்ளது என்றும், உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் தமிழக வெற்றிக் கழகம் ஏற்கும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக, தவெக மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகளை கௌரவப்படுத்தும் விதமாக, விவசாயிகளை பனையூருக்கு அழைத்து நேரில் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறப்பட்டது. அதன்படி, கடந்த நவ 23ஆம் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நூற்றிற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை அழைத்து அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் விஜய்.
இதுமட்டும் அல்லாது, பேருந்து மூலமாக அழைத்து வரப்பட்ட விவசாயிகள் அவர்களது குடும்பங்கள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு சைவ விருந்தும் அளித்து நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்