திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் பக்தர்கள் வருகை புரிந்து அங்குள்ள சிவபெருமானை வழிபட்டு வருகின்றனர். இதில் சில வெளிநாட்டு பக்தர்களில் பெரும்பாலோர் திருவண்ணாமலையில் உள்ள நம்பிக்கையுடைவர்கள் பெயரில் நிலம் வாங்கி அதில் பண்ணை வீடு கட்டி சிவதலத்தை வணங்கி வருகின்றனர்.
இதேபோன்று திருவண்ணாமலை சுற்றி ஏராளமான வெளிநாட்டவர் பண்ணை வீடுகள் அமைத்து தங்கி வருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நெடுங்காவடி பகுதியில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சுமார் 72 வயதான அண்ணா லூசார்ட்டி என்ற பெண்மணி கடந்த 5 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டு பெண்ணிற்கு உதவி செய்யும் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவர், வெளிநாட்டுப் பெண் தங்கி இருந்த பண்ணை வீட்டிற்கு சென்றபோது அங்கே ஏதோ துர்நாற்றம் வீசியுள்ளது. அதை அறிந்து உள்ளே சென்று பார்த்த போது வெளிநாட்டு வாழ் பெண்மணி இறந்து அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்களை வைத்து காவல்துறைக்கோ, வருவாய்த்துறைக்கோ எவ்வித தகவலும் அளிக்காமல் பெண்மணி தங்கி இருந்த தோட்டத்திலேயே அடக்கம் செய்துள்ளார். பின்னர் தடராப்பட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் நடந்த சம்பவத்தை கூறியதன் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் சாலம்மாள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்து இறந்த பெண்மணியில் இறப்பில் சந்தேகம் அடைந்து இயற்கையிலேயே அவர் மரணம் அடைந்தாரா அல்லது கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அவர் பயன்படுத்திய லேப்டாப், ஏடிஎம் கார்டு, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, சாத்தனூர் அணை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் முறையாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்து, இறந்த வெளிநாட்டு பெண்மணியின் உடலை தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர், திருவண்ணாமலை குற்றபிரிவு கூடுதல் துணை கண்காணிப்பாளர் பழனி, செங்கம் துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல், மேல் செங்கம் இன்ஸ்பெக்டர் சாந்தி, தண்டராம்ப்பட்டு வட்டாட்சியர் அப்துல் ரகுப், கிராம அலுவலர் சாலம்மாள், ரெவென்யூ இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணன் முன்னிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் கமலகண்ணன் தலைமையிலான மருத்துவ குழு நிகழ்விடத்திலேயே உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது இது குறித்த உடற்கூறு ஆய்வறிக்கை இன்னும் 2 நாட்களில் காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது வெளிநாட்டு பெண்மணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பிலிப்பைன்ஸில் படகு கவிழ்ந்து விபத்து - மீட்புப் பணிகள் தீவிரம்