திருவண்ணாமலை: ஆரணியை அடுத்த ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் புவனேஷ் குமார் (29). இவர் பாஜகவில் ஆரணி நகரத் தலைவராக உள்ளார்.
இவர், கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது ஆரணி தொகுதியில் நிற்க சட்டப்பேரவை உறுப்பினர் சீட்டு கேட்டு சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வடசென்னை மாவட்ட அதிமுக நிர்வாகியான விஜயராமனை அனுகியுள்ளார்.
இதனையடுத்து விஜயராமன் அப்போதைய பாஜக தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய இணை அமைச்சருமான கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளரான நரோத்தமனிடம் சட்டப்பேரவை உறுப்பினர் சீட் குறித்து கேட்டுள்ளார்.
ஒரு எம்எல்ஏ சீட்டு ஒரு கோடி ரூபாய்
இதனையடுத்து அவர்கள் இருவரும் இணைந்து சட்டப்பேரவை உறுப்பினர் சீட்டு வாங்கித் தருவதாக புவனேஷ் குமாரிடம் உறுதியளித்ததுடன், அதற்கு 1 கோடி ரூபாய் தர வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து புவனேஷ் குமார் முதல் தவணையாக 50 லட்சம் ரூபாய் பணத்தை தி.நகரிலுள்ள தனியார் விடுதியில் வைத்து நரோத்தமன் தந்தை சிட்டிபாபு, விஜயராமன் முன்னிலையில் நரோத்தமனிடம் கொடுத்துள்ளார்.
அப்போது, உங்களது பெயர் பட்டியலில் வந்தவுடன் மீதமுள்ள 50 லட்சம் ரூபாய் பணத்தையும் தர வேண்டும் எனக்கூறி புவனேஷ் குமாரை அனுப்பியுள்ளனர். இதனையடுத்து தேர்தலின் போது பெயர் பட்டியலில் புவனேஷ் குமாரின் பெயர் வராத நிலையில், சந்தேகமடைந்த அவர் நரோத்தமனிடம் தனது பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார்.
இந்நிலையில், அவர்கள் பணத்தை தர மறுத்து இழுத்தடித்ததால் பாஜக கிஷன் ரெட்டியிடம் இது குறித்த தகவலை புவனேஷ் தெரிவித்துள்ளார். அப்போது கிஷன் ரெட்டியும் பணத்தை உடனடியாக திருப்பி செலுத்துமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அவர்கள் புவனேஷ் குமாரிடம் இருந்து பெற்ற பணத்தை திருப்பித் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பணத்தைத் திருப்பி கேட்ட புவனேஷ் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் புவனேஷ் குமார் தனது 50 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டு தந்து, தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஜூலை மாதம் புகார் அளித்தார்.
மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது
இதனையடுத்து காவல் துறையினர், மோசடி, கூட்டுசதி உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் உள்துறை இணை அமைச்சரின் முன்னாள் உதவியாளரான நரோத்தமன், அவரது தந்தை சிட்டிபாபு, விஜயராமன், அவரது மகன் சிவ பாலாஜி ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், அந்த நான்கு பேரும் தலைமறைவானதால் அவர்களை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்துவந்த நரோத்தமன், அவரது தந்தை சிட்டிபாபு ஆகியோர் ஹைதராபாத்தில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை காவல் துறையினர், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் ஹைதரபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்டு பெற்று சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாகவுள்ள விஜயராமன், சிவ பாலாஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை: 2 அரசு மருத்துவர்கள் பணிநீக்கம்!