ஆரணி மக்களவை உறுப்பினர் விஷ்ணு பிரசாத், இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியைச் சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெறும் அறிவிப்போடுதான் இந்த அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
எந்தத் திட்டமும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. நம்மீதுள்ள கடனை மென்மேலும் உயர்த்துவதில் இந்த அதிமுக அரசு சாதனை புரிந்துள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், வீடே கட்டாதவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. கைத்தறி கூட்டுறவு நெசவாளர்களுக்கு கொடுக்கப்படும் பணம் உண்மையான நெசவாளர்களுக்குச் செல்லாமல், சேலை நெய்யாத, விற்பனை செய்யாத நபர்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் தொடர்ந்து செல்கின்றது.
இதுபோல் ஒவ்வொரு திட்டத்திலும் பயனாளிகள் இல்லாமலேயே பணம் எடுக்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. மணல் கடத்தல் மாவட்டத்தில் தினந்தோறும் நடைபெறுகிறது. லாட்டரி என்ற பெயரிலேயே மக்களை சுரண்டும் வேலையும் நடைபெற்று வருகிறது.
கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. செய்யாறு பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் கல்லூரியின் அருகிலேயே உள்ளது. இது மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த இடையூறை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.
எனவே, மக்கள் பிரதிநிதி என்கின்ற வகையில் இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்திற்குச் எடுத்துச்சென்றுள்ளேன். இந்தப் பிரச்சினைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தீர்வு காணவேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: இயற்கை விவசாயத்தை கையிலெடுத்து பசுமை கண்ட பட்டதாரி!