திருவண்ணாமலை மாவட்டம், தாமரை நகர் பகுதியில் வசிப்பவர் மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு, சென்னை, திருமங்கலத்தில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் ஒன்றில் இணைந்து படித்து வந்துள்ளார்.
அப்போது அங்கு அவருடன் பயின்ற தருமபுரி மாவட்டம், அரூரைச் சென்ற ஞானமணி என்பவர், மாலதியைக் காதலிப்பதாகக் கூறிய நிலையில், மாலதி அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார். ஆனால் ஞானமணி தொடர்ந்து மாலதிக்குத் தெரியாமல் அவரது செல்போனில் இருந்து தனது எண்ணுக்கு அழைத்து அவரது எண்ணைப் பதிவு செய்து கொண்டு, வாட்ஸ்அப் மூலம் அவரைக் காதலிப்பதாகக் கூறி குறுஞ்செய்திகள் அனுப்பி தொல்லை செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஞானமணி அளித்த தொந்தரவைத் தாங்க முடியாத மாலதி, தனது சிம் கார்டை மாற்றியுள்ளார். இருந்தபோதிலும் மாலதியின் பேஸ்புக் கணக்கைக் கண்டறிந்து, அங்கிருந்து அவரது செல்போன் நம்பரை மீண்டும் கண்டறிந்து, அருவருக்கத்தக்க குறுஞ்செய்திகளை அவரது செல்போனுக்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.
தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக மாலதி பணிபுரிந்து வரும் நிலையில், அந்தப் பள்ளியில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டு அவரது மன அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், அருவருக்கத்தக்கத்தக்க படங்கள், செய்திகளை அனுப்பியும் கொலை மிரட்டல் விடுத்தும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
சுமார் எட்டு ஆண்டுகளாக ஞானமணி இவ்வாறு தொந்தரவளித்து வரும் நிலையில், இனியும் அவரது தொல்லைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது என முடிவு செய்த மாலதி, திருவண்ணாமலை நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் ஞானமணியை கைது செய்த காவல் துறையினர், அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : வன பயிற்சியாளர் பணிக்கு, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான ஒதுக்கீடு வழங்க கோரிய மனு தள்ளுபடி