திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை வார்டில் 150க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு மனநல மருத்துவர் மூலம் மன அழுத்தத்திற்கான ஆலோசனை வழங்கப்பட்டது.
தொடர்ந்து நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது சில நோயாளிகள், மன இறுக்கத்துடன் இருப்பதாகவும், படிப்பதற்கு புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து, தொண்டு நிறுவனத்தின் மூலமாக 500 புத்தகங்கள் கொண்ட ஒரு சிறிய நூலகத்தை மருத்துவமனையில் ஏற்படுத்தினர்.
மேலும், நோயாளிகள் விளையாடுவதற்கு கேரம் போர்டையும் வாங்கிக் கொடுத்தனர். தற்போது புத்தகங்கள் படிப்பதன் மூலமும் கேரம் விளையாடுவதன் மூலமும் கரோனா நோயாளிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உற்சாகத்துடன் பொழுதைக் கழித்து வருகின்றனர். இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபுவை தொடர்புகொண்டு பேசினோம்.
அவர், "எங்கள் கண்காணிப்பில் உள்ள கோவிட் மையங்களுக்கு நாள்தோறும் சென்று நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா எனக் கண்கணிப்போம். அப்போது சிலர் மன அழுத்தத்தில் தனியாக உட்கார்ந்து இருப்பார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்பு சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த தம்பதி தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது அவர்கள் வருத்தத்தில் தனியாக அமர்ந்து இருந்தனர். நாங்கள் அவர்களிடம் விசாரித்தபோது தங்களின் மகனின் பிறந்தநாளைக் கொண்டாட முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளதாக தம்பதி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள மருத்துவக் குழுவினர் அவர்களின் சோகத்தை தீர்க்க முடிவு செய்து, தம்பதியருக்கு ஆச்சிரியம் ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனையில் பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தோம்.
இதனால் சோகத்தில் இருந்த பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்த மருத்துவக் குழுவினர் கோவிட் மையத்தில் உள்ள பிற நோயாளிகளிடத்திலும் மனம் விட்ட பேச ஆரம்பித்தனர். மனஅழுத்தில் உள்ளோருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதை நிறைவேற்றினர்.
தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் எங்களுக்கு புத்தகம், விளையாட்டு உபகரணங்கள் இருந்தால் மன அழுத்தம் நீங்கும் எனக் கூறினார்கள். அதனால் நாங்கள் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் படிப்பதற்கு 500 புத்தகங்கள் வாங்கி கோவிட் மையங்களில் சிறிய நூலகம் அமைத்தும், கேரம் போர்ட், செஸ் என விளையாட்டு உபகரணங்களும் வாங்கிக் கொடுத்தோம். இதனால் நோயாளிகள் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க; கரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனுக்கு நீதி கேட்ட நவீன கண்ணகி