திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. வனிதா சர்வதேசப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருபவர் மாணவி வினிஷா உமாசங்கர். இவர் சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் அயனிங் கார்ட்டை (Solar Ironing Cart) கண்டுபிடித்துள்ளார். சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடிக்கும் யோசனை வினிஷாவுக்கு 12 வயதில் ஏற்பட்டுள்ளது.
பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, துணி தேய்ப்பவர்கள் இஸ்திரிப் பெட்டிக்கு கரியை பயன்படுத்துவதால் ஏற்படும் செலவு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவை குறித்து சிந்தித்தபோதே இந்த யோசனை வினிஷாவுக்கு தோன்றியுள்ளது.
இளம் வயது கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது
தனது ஐடியாவை சிறந்த கண்டுபிடிப்பாக மாற்ற சுமார் நான்கு ஆண்டுகள் வினிஷா கடுமையாக உழைத்துள்ளார். இவரது இந்த சாதனைக்கு மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத்துறை வழங்கும் Dr APJ Abdul Kalam IGNITE Awards கடந்த 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு இவருக்கு ஸ்வீடன் நாட்டின் சூழலியல் அறக்கட்டளை சார்பில் இளம் வயது கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டது.
இவ்விருதினை ஸ்வீடனின் சுற்றுச்சூழல் அமைச்சரும், துணைப்பிரதமர் இசபெல்லா லோவினும் கடந்த அண்டு இணையவழி நிகழ்ச்சி மூலமாக வழங்கினர். இவ்விருது சுற்றுச்சூழலைக் காக்கும் விதமான சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்பட்டது.
எர்த்ஷார்ட் விருதிற்கு பரிந்துரை
தற்போது இவர் பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸின் எர்த்ஷார்ட் (Earthshot) விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவ்விருதானது சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு புதுமையான தீர்வு வழங்குபவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பிரிட்டனின் இளவரசர் வில்லியம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய எர்த்ஷாட் (Earthshot) விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் 15 இறுதிப் போட்டியாளர்களில் வினிஷா உமாசங்கர் இடம்பெற்றுள்ளார்.
வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில் வீணாக காலத்தை கழிக்கும் சில மாணவர்களுக்கு மத்தியில், புத்தக வாசிப்பு, தொடர் முயற்சி காரணமாக பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொண்டுவர நினைக்கும் மாணவி வினிஷாவின் முயற்சி பாராட்டத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றார் ஆர்.என். ரவி