புதுடெல்லி: டெல்லி சட்டமன்ற பாஜக தலைவராக நேற்று பிப்.19ஆம் தேதி வியாழன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா, டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக இன்று மதியம் பதவியேற்க உள்ளார். ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, தங்களது கட்சியின் சட்டமன்ற தலைவரையும், டெல்லி முதலமைச்சரையும் தேர்ந்தெடுப்பதற்கான பாஜக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பல மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டம் இரவு 7 மணியளவில் முடிவடைந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டெல்லி சட்டமன்ற பாஜக தலைவராக ரேகா குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், டெல்லியின் முதலமைச்சராகவும் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்ஸேனாவை நேரில் சந்தித்த ரேகா குப்தா, ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த சந்திப்பின் போது, பாஜக மூத்த தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்டோர் ரேகா குப்தாவுடன் இருந்தனர்.
Leader of the BJP Legislative Party in the Delhi Legislative Assembly, Smt Rekha Gupta called on Hon’ble LG, Shri V. K. Saxena at Raj Niwas and staked her claim to form the new Government of NCT of Delhi.
— LG Delhi (@LtGovDelhi) February 19, 2025
Hon’ble LG accepted the claim and invited her to form the new government. pic.twitter.com/OYnZyj3gbl
மொத்தம் 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் 48 இடங்களை கைப்பற்றி பாஜக அமோக வெற்றிப் பெற்றது. இதையடுத்த 26 ஆண்டுகளுக்கு பின்னர், நாட்டின் தலைநகரில் பாஜக ஆட்சி அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
"டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதலமைச்சராக ரேகா குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்." என்று பாஜகவின் மத்திய பார்வையாளர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறினார்.
"என் மீது நம்பிக்கை வைத்து முதலமைச்சர் என்ற பொறுப்பை அளித்துள்ள பாஜக தலைவர்களுக்கும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்." என்று ரேகா குப்தா தெரிவித்தார்.
"டெல்லி சட்டமன்ற பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரேகா குப்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பிரதமர் மோடி வழிகாட்டுதலின்படி, உலகளவில் தலைசிறந்த இடத்துக்கு டெல்லியை கொண்டு வர அர்ப்பணிப்புடன் நீங்கள் உழைப்பீர்கள் என்று நம்புகிறேன்." என்று இந்தி எக்ஸ் வலைதள பதிவில் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது முதல்வர்: முதல்முறையாக எம்எல்ஏ ஆகி உள்ள ரேகா குப்தா, டெல்லியின் ஒன்பதாவது முதலமைச்சர் என்ற பெருமையை பெறுகிறார். 50 வயதான இவர், அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஷாலிமர் பாக் தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை 29 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இவருடன் பர்வேஷ் வர்மா டெல்லியின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
நான்காவது பெண் முதல்வர்: மறைந்த காங்கிரஸ் முதலமைச்சர் ஷீலா தீட்ஷித், மறைந்த பாஜக முதலமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அண்மையில் சில மாதங்கள் முதலமைச்சராக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி ஆகியோரின் வரிசையில் டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்க உள்ளார். இவர், பாஜக மகளிர் அணியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.