சென்னை: இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிப்ரவரி 19 ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக கூறப்பட்ட சில வழக்கறிஞர்களை காவல்துறை கைது செய்ய முயன்றபோது மோதல் உருவானது. அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மட்டுமல்லாமல் சமாதானம் செய்ய முயன்ற நீதிபதி ஒருவரையும் காவல்துறையினர் தாக்கியதாக கூறப்பட்டது. மாநில அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: தமிழக அரசு வழக்கறிஞர் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி! - MADURAI HIGH COURT
காவல்துறை அத்துமீறி நீதிமன்றத்திற்குள் நுழைந்து தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 19ஆம் தேதி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்.
இதனையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில், வழக்கறிஞர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சாலையில் ஊர்வலமாக செல்ல முயன்ற 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை தடுத்த காவல்துறையினர், அவர்களை கைது செய்தனர்.