சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு உதவிப்பொறியாளர், தட்டச்சர், ஓட்டுநர், நாதஸ்வர கலைஞர் உள்பட 62 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கோயில் இணை ஆணையர் கடந்த ஜனவரி 24ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
இதை எதிர்த்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ்த்தேசிய மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், “அரசு வேலைவாய்ப்பிற்கான நடைமுறைகள் மூலம் இடஒதுக்கீட்டைப் பின்பற்றி நிரப்பப்பட வேண்டிய இடங்களை, விதிகளைப் பின்பற்றாமல் நிரப்பும் வகையில் இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு சட்டவிரோதமானது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பணி சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக எவ்வாறு பொது நல வழக்குத்தொடர முடியும் எனவும், விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என, நீதிபதிகள் சந்தேகம் எழுப்பியதை அடுத்து, வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்று, வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சிவகங்கையில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி