திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியையொட்டி ஏராளமான தரைக்காடுகள் உள்ளன. இந்தக் காட்டில் அரியவகை மான், காட்டுப்பன்றி, மயில், முயல், காட்டெருமை போன்ற விலங்குகள் அதிகளவில் உள்ளதால் சில சமூகவிரோதிகள் இந்த அரியவகை விலங்குகளை வேட்டியாடி அதன் இறைச்சி, கொம்பு, தோல் ஆகியவை வெளிமாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்றுவருகின்றனர்.
இந்தநிலையில், செங்கத்தை அடுத்த புளியம்பட்டி வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட கையில் நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கியுடன் ஒருவர் சுற்றித்திரிவதாகச் செங்கம் வனச்சரகர் அலுவலர் ராமநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் ராமநாதன் தலைமையிலான குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வனத் துறையினர் தென்பெண்ணை பீட் பகுதி அருகே சென்றபோது துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் அவர்களைக் கண்டதும் தப்பியோட முயன்றார். அப்போது வனத் துறையினர் சுற்றிவளைத்து அவரைக் கைதுசெய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் தானிப்பாடி மேல்பாச்சார் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும் அவர் வெகுநாள்களாக வனவிலங்குகளை வேட்டையாடி வனவிலங்குகளை விலைக்கு விற்றுவந்ததும் தெரியவந்தது.
மேலும் அவரிடமிருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி ஒன்றையும், 16 நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் கைதுசெய்த விஜயகுமாரை மேல்செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
செங்கம் பகுதியில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் வனப்பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த வனத் துறையினர் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் எனவும் அப்பகுதி மக்களும் சமூக செயற்பாட்டாளர்களும் வனத் துறையினருக்கு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விபத்தில் கணவனின் கண்முன்னே மனைவி உயிரிழந்த சோகம்: சிசிடிவி காணொலி