சத்தியமங்கலம்: எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது இருந்த அதிமுகவினர் தற்போது வயது முதிர்ந்து காணப்படுவதால் இளைஞர் வாக்கு வங்கியை பெறவதற்காக அக் கட்சி முயற்சி செய்து வருகிறது. கட்சியில் இளம் வயது பெண்கள், இளஞர்கள் அதிகளவில் சேர்வதற்கு விளையாட்டுதுறை வீரர்களை நோக்கி அதிமுக காய் நகர்த்துகிறது.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள், கபடி, கிரிகெட், பேட்மிட்டன், சிலம்பாட்டம் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் திறமை வாய்ந்தவர்களை அதிமுகவுக்கு இழுத்தால் இன்றைய இளைஞர்களின் வாக்கு வங்கி அதிமுகவுக்கு கிடைக்கும் என்ற நோக்கில் அக் கட்சி ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானி சாகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக தொண்டர்கள் மத்தியில் இதனை வலியுறுத்தினார். சத்தியமங்கலத்தில் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி கூட்டம் பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் பண்ணாரி தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசுகையில், "அதிமுக வரும் தேர்தலில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி. அதற்கான முதற்கட்ட பணியாக பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியானர்களை நிர்வாகிகள் தேர்வு செய்து தினந்தோறும் 25 பேரை சந்திக்க வேண்டும். அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வேண்டும் என்பது முதற்பணியாக இருக்க வேண்டும். புதியதாக விளையாட்டு வீரர்களை அதிமுக உறுப்பினர்களாக மாற்ற வேண்டும். அவர்கள் மூலம் அதிமுக மீண்டும் ஒர் அடித்தளத்தை உருவாக்கும். தொண்டர்கள் தான் அதிமுகவுக்கு பலம்." என்றார்.