திருவண்ணாமலை: காளை விடும் விழா, மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் ஆரணி அருகே கொளத்தூர் கிராமத்தில் அனுமதியின்றி காளை விழா நடத்தப்பட்டது.
அதில் 500க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் விளையாட்டில் ஈடுபடுத்தினர். 1000க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அனுமதி இல்லாமல் காளை விடும் விழா நடத்திய கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விழாக்குழுவினர் 5 பேர் மீது கண்ணமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து, நேற்று ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் போளூர் மற்றும் கலசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காளை விடும் சங்கத்தினர் மற்றும் மஞ்சு விரட்டு நடத்தும் சங்கத்தினர், ஊராட்சி மன்றத் தலைவர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியர் கவிதா, ”கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொங்கல் வருவதற்கு இன்னும் 10 நாள்கள் இருப்பதால்,
போளூர், கலசப்பாக்கம், கடலாடி ஆகியப் பகுதிகளில் காளை விடும் விழா மற்றும் மஞ்சுவிரட்டு ஆகியப் போட்டிகளை அரசாங்கம் உத்தரவு வரும் வரை யாரும் நடத்தக்கூடாது. உத்தரவு வருவதற்கு முன்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும்” என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: ஜெ., வேதா நிலையம் வழக்கு: அரசு கையகப்படுத்தியது சட்ட விரோதம் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு