திருவள்ளூர்: ஆவடி நெடுஞ்சாலை தொழுவூர் கிராமம் அருகே நேற்று (ஜூன் 26) மாலை 6 மணியளவில் வேகமாக வந்த ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையோர கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனைக் கண்ட தொழுவூர் கிராம மக்கள் பதறியடித்துக்கொண்டு ஆட்டோவில் இருந்தவர்களை மீட்பதற்காக சென்றனர்.
போதை இளைஞர்கள் கைது:
அப்போது ஆட்டோவிலிருந்து வெளியே வந்த இளைஞர்கள் போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், கத்தியைக் காட்டி மிரட்டி அங்கிருந்தவர்களை வெட்ட முயன்றுள்ளனர்.
இதனைச் சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் செய்வதறியாது திகைத்த நிலையில், அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அந்த நான்கு போதை இளைஞர்களைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினர், போதையில் தகராறு செய்த இளைஞர்களை பொதுமக்களிடமிருந்து மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறை விசாரணை:
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடி பகுதியைச் சேர்ந்த புவனேஷ், வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் எனத் தெரியவந்தது.
பிடிபட்ட நான்கு பேரில் இரண்டு பேர் ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவலர்களுடன் மல்லுக்கட்டிய இளைஞர்கள் கைது: வைரலான காணொலி!