சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், புட்லுார்-காக்களூர் ரயில்வே கடவுப்பாதை அமைந்துள்ளது. இந்த கடவுப்பாதை வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட தேவைகளுக்காக கடந்து செல்கின்றனர். ஆனால், ரயில் தண்டவாளம் வழியாக தினமும் 280க்கும் மேற்பட்ட புறநகர் ரயில் சேவை, விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், காலை, மாலை நேரங்களில், நீண்ட நேரம் கடவுப்பாதை மூடப்படுகிறது. அச்சமயத்தில், அவசர பணி, மருத்துவ தேவைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, புட்லுார் ரயில்வே கடவுப்பாதையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதையேற்று, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் 2015ஆம் ஆண்டு, காக்களூர் - புட்லுாரை இணைக்கும் வகையில் 18 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கினர். அதன்படி, 620 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் உடைய பாலம் கட்டும் பணி அதே ஆண்டு தொடங்கியது. ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில், இரண்டு தூண்கள் அமைக்கப்பட்டது.
ஆனால், நெடுஞ்சாலைத் துறை பகுதியில் 14 தூண்கள் அமைக்கும் பணிக்கு, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. அதனால் மேம்பாலப் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டு, தற்போது இந்த மாதம் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பணிகள் சீக்கிரமாக நிறைவடையும் என்றும், மழைக்காலம் வருவதற்கு முன்பாக அனைத்து தூண்களும் நிறுவப்படும் என்று மேம்பால ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்