திருவள்ளூர்: சென்னை புழல் மகளிர் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி என பல்வேறு வழக்குகளில் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், பல்வேறு கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த காந்திமதி (65), மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிறையில் உள்ள கழிவறையில் காந்திமதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் அளித்த தகவலின் பேரில், சிறைத் துறையினர் காந்திமதியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.
அப்போது, அங்கு காந்திமதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர்.
தொடர்ந்து, சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் நடந்த இலவச சட்ட உதவி மையத்தில் ஜாமீன் கிடைத்த நிலையில், உறவினர்கள் மூலம் சூரிட்டி கிடைக்காததால் காந்திமதி விரக்தியில் இருந்து உள்ளார்.
மேலும், தற்கொலை செய்து கொண்ட பெண் கைதி காந்திமதி மீது, கடந்த 2014ஆம் ஆண்டு வேளச்சேரியில், தான் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் லட்சுமிதேவியை கட்டிப் போட்டு, 12 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த வழக்கு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் ரயில் மோதி சகோதரிகள் இருவர் உயிரிழப்பு!